Translate

Saturday 31 August 2019

இருளவுள்ள உலகை,
இறுக்கும் தீ.


உற்பத்தித் தொழிற்சாலை ஒன்று எரிகின்றது, அதனுடன் சேர்ந்து சுத்திகரிப்புச் சாலையும் சேர்ந்து எரிகின்றது. இது ஒரு விடுகதை அல்ல, உண்மையான ஒரு சம்பவம். இன்று உலக மக்களிற்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடிய ஒரு நிகழ்வு உலகின் ஓரிடத்தில் நடக்கின்றது.



பிரேசில் நாட்டில் தன்னுடைய கொடிய செந் நாவை நீட்டி அகட்டி அமேசன் காட்டையே விழுங்கி கொண்டிருக்கும் தீயானது அந்த நாட்டு அரசியல்த் தலைவர்களின் ஆசியுடனேயே பரவத் தொடங்கியது. உலகில் உள்ள மிகப் பெரிய காடு என்று கணிக்கப்பட்ட அமேசான் காட்டில், விலைமதிப்பற்ற மூலிகைச் செடிகள், அரிய வகை உயிரினங்கள், பெரிய சிறிய மரங்கள், பல வகை விலங்குகள் என மனிதனிற்கு வளங்கள் கொடுக்கும் வரமாக உள்ளது.




இந்தக் காட்டுத் தீயால் மேற்குறிப்பிடப்பட்டவை அழியும் நிலையில் உள்ளதோடு மனிதனிற்கு  தீங்கு செய்யும் CO காபன் மொனொட்ஸைட்  வாயுவும் வெளிவிடப்படுகின்றது. இந்த வாயுவை சுவாசித்தால் தலைவலி வாந்தி மயக்கம் என்பன ஏற்படும். அதிகளவு சுவாசிக்க நேர்ந்தால், சுயநினைவற்று மரணிக்கும் நிலை ஏற்பட வாய்ப்பும் உருவாகும்.



உலகின் நுரையீரல் என்று அழைக்கப்படும் அமேசன் காடுகள் உலக மக்கள் சுவாசிக்கத் தேவையான உயிர்வாயுவான O2 ஒட்சிசன் வாயுவின் 20 விழுக்காட்டைக் கொடுக்கின்றது. O2ஐ உற்பத்தி செய்வதால் மரங்கள் உற்பத்தித் தொழிற்சாலையாக உள்ளது. அதே நேரம் ஒளித்தொகுப்பு நடப்பதால் CO2 காபன் ஈர் ஓட்ஸைடை உள் எடுத்து O2 ஆக மாற்றுகின்றது. இச் செயற்பாட்டால் வளிமண்டலம் சுத்திகரிக்கப்படுவதால் சுத்திகரிப்பு ஆலையாகவும் மரங்கள் உள்ளது.



அமேசன் காடானது எரிந்து அழியும் பொது O2 உற்பத்தித் தொழிற்சாலையும், வளிமண்டல சுத்திகரிப்புத் தொழிற்சாலையும் எரிகின்றது என்பது கண்கூடு. சகாரா பாலைவனத்தில் பறக்கும் புழுதிமண் அமேசான் காட்டு மரங்களிற்கு உரமாக மாறுகின்றது. அமேசான் காட்டிலிருந்து வெளிவரும் O2 உலக மக்களின் சுவாசத்திற்கு உதவுகின்றது. இன்று இக்காடானது எரிந்து கொண்டிருப்பதனால், வளிமண்டலத்தில் மனிதனிற்கு ஆபத்து விளைவிக்கும் CO காபன் மொனொட்ஸைட் கலந்துகொண்டுள்ளது. இதை வளிமண்டல அகச் சிவப்பு ஒலிக்கருவி (Atmospherie Infrared Sounder ) மூலம் நாசா கண்டுபிடித்து அறிவித்துள்ளது. இந்த வாயு, வளிமண்டலத்தில் நீண்ட தூரத்திற்குச் சென்று காற்றை மாசுபடுத்தி பசுமை இல்ல வாயு மற்றும் பருவ நிலை மாற்றம் என்பன ஏற்படுத்தி சுற்றுச் சூழல் கேடு விளைவிக்கும்.



காற்றிற்கு ஏது வேலி என்பதற்கிணங்க அமேசன் காட்டிலிருந்து O2 ஐ பெற்றுக் கொண்ட உலகம், இன்று CO காபன்மொனொட்ஸைட்டை சுவாசிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். அமேசான் காட்டை அழிப்பதன் மூலம் பிரேசில் நாட்டில் விவசாய நிலத்தைப் பெருக்கிக் கொள்ளலாம் என்னும் குறுகிய நோக்கமிருந்த போதும், இயற்கை வளமிகுந்த அமேசன் காடு பொதுவுடைமையாகும். பொது நல நோக்கத்தோடு அவாதானித்தால், இந்தத் தீப்பரம்பலால் பெரும் ஆபத்துண்டாகியுள்ளது. G-7 உச்ச மகாநாட்டில் அமேசன் காட்டுத் தீயை அணைக்க 22 மில்லியன் அமெரிக்க டொலர் வழங்க முடிவு செய்யப்பட்டது. ஆனால் அவ்வுதவியைப் பெற பிரேசில் மறுத்துவிட்டது. அதை ஏற்க சில நிபந்தனைகளையும் விதித்துள்ளது.



நாசா வெளியிட்டுள்ள ஒளிப்படம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நாசா வெளியிட்டுள்ள வரைபடத்தில் CO கார்பன்மொனொட்ஸைட்டு அடர்த்தியாக பச்சை நிறத்தில் காணப்படுகின்றது. இந்தக் CO கார்பன்மொனொட்ஸைட்டு கலந்துள்ள மேகங்கள் அமேசன் பகுதியின் வடமேற்குப் பகுதிக்கு பரந்து விரிந்து செல்லுகின்றது. அங்கிருந்து தென்கிழக்கு பகுதியை நோக்கி பரவுகின்றது.



தாயானவள் பிள்ளைக்கு உயிர்கொடுத்தது போல் மரங்கள் மனிதனிற்கு சுவாசிக்க (உயிர்வாழ) O2 தருகின்றது. தாயிற்கு ஒரு கேடு வந்தால் தனயன் வாழாதிருக்கலாமோ? அமேசன் காட்டிற்கு ஏற்பட்ட அழிவை தடுத்து நிறுத்த வேண்டியது மனிதனின் கடமை. உலகத்தின் நுரையீரல் என்று அழைக்கப்படும் அமேசன் காட்டை அழிவில் இருந்து பாதுகாக்க நாம் என்ன செய்ய வேண்டும்? தீயை அணைக்க எம் கைகளால் முடியவில்லையாயினும், இந்தக் கட்டுரையை உங்கள் உறவுகளோடும் நட்புகளோடும் பகிர்ந்து மனித உணர்வுகளைத் தட்டி எழுப்பி தீயை கட்டுப்படுத்தி உலகைக் காக்க உங்களாலும் முடியும். இதோ அந்த அரிய வாய்ப்பு உங்களிற்கு.


எழுத்து,
மங்கை அரசி.

No comments:

Post a Comment